தமிழின் தனிச் சிறப்புக்கள்
தமிழின் தனிச் சிறப்புக்கள் எனப் பல்வேறு விடயங்கள் கூறப்படுகின்றன. பிறமொழிகளில் இல்லாத சில ஒலிகள் தமிழில் உண்டு என்பது அவற்றுள் ஒன்று. தமிழிலே தான் அதிகம் எழுத்துக்கள் உள்ளன என்றுஞ் சொல்லியிருக்கிறார்கள். தமிழே உலகின் மூத்த மொழி என்கிறார்கள். தமிழே உலக மொழிகளிற் தூய்மையானது என்றும் அதிற் சேர்க்கப்பட்டுள்ள அயற் சொற்களின் துணையில்லாது தனித்தமிழாற் செயற்பட இயலும் என்று சொல்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். வேறு சிலர் இன்னும் ஒரு படி அப்பாற் சென்று உலக மொழிகள் எல்லாமே தமிழிலிருந்து தான் வந்தன என்பதுடன் எல்லா அருஞ் சொற்களுக்கும் தமிழிற் தோற்றுவாய் உண்டு என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கவும் முற்படுவார்கள்.
மேற்கூறியவாறான சிறப்புக்கள் ஒரு மொழியின் பயனுடன் அதிகம் உறவற்றவை. சிறப்புக்கள் எனக் கூறப்படுகிற சில சுமைகளா எனவும் நாங்கள் சிந்திக்க வேண்டும். வாட் பற் புலி (ஸேபர் ட்டுத் ற்றைகர்) என்கிற விலங்கின் வேட்டைப் பற்கள் வெகு நீளமானவை. அது ஒரு சிறப்பு ஆனால், அதன் காரணமாகவே திறமையாக வேட்டையாடி உண்ண இயலாது போய் அந்த இனம் அழிந்தே போனது. எந்தச் சிறப்பும் அதற்குரிய சூழலையொட்டிய பெறுமதியுடையதாகிறது.
தமிழ் மட்டுமன்றி வேறு பல மொழிகளும் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. எனினும் சில சமூகத்தினர் தமது மொழியில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை அடையாளங் கண்டு செம்மொழி அல்லது தொல்மொழி எனவும் நவீன மொழியெனவும் மொழிக்குள் வேறுபாடு கண்டு கொள்கின்றன. வெறுந் தொன்மையை அம்மொழி பேசுவோர் பெரியதொரு சிறப்பாகக் கொள்ளவில்லை. வங்கமொழி பேசுவோரோ தெலுங்கு மொழி பேசுவோரோ அம்மொழிகள் உருவானதாகச் சொல்லப்பட்டு காலங்கட்கு முன்பு மொழியில்லாமல் இருந்தனரா? நிச்சயமாக இல்லை. எனினும் மொழி ஒவ்வொன்றும் இன்றைய அடையாளத்தைப் பெற்று இலக்கணம் வகுக்கப்பட்ட காலத்தையோ மொழிக்குரிய இலக்கியங்கள் பதிவாகிய காலத்தையோ மொழியின் தோற்றமாக அடையாளங் காணுகின்றனர்.
தமிழில் மிகத் தொன்மையான இலக்கியங்கள் உள்ளன. ஆனால் அவை தனியே இன்றைய தமிழ் மொழி அறிவின் துணை கொண்டு விளங்கிக் கொள்ளக் கூடியவையல்ல இடைக்கால இலக்கியங்கள் எனக் கூடிய தேவார திருவாசகங்களையும் திவ்வியப் பிரபந்தங்களையும் அவற்றினும் பின்பான கம்பராமாயணத்தையுங் கூட, உரையாசிரியர்களது துணையின்றி விளங்கிக் கொள்ள இயலாது. அவற்றுக்குரிய மொழி நடையில் இன்று எழுதுவது நகைப்புக்குரியதாகவே இருக்கும் இந்த நிலை தமிழுக்கு மட்டுமுரியதல்ல எல்லா உலக மொழிகட்கும் உரியது.
தமிழின் உண்மையான சிறப்புக்கள் அழிந்த புலியினத்தின் பற்கள் போன்றவையோ அழிந்து போன மமொத் என்கிற யானையினத்தின் நீண்ட தந்தங்கள் போன்றவையோ அல்ல. எந்தச் சிறப்பும் ஒரு மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக அமையக் கூடாது. அவ்வாறு அமையுமாயின் அது திருத்தப்பட வேண்டும் அல்லது நீக்கப்படவேண்டும்.
தமிழ் அதனுடைய மூல வடிவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுடன் இரண்டாயிரம் ஆண்டுக் காலமாக வளர்ச்சி கண்ட மொழி. அதன் மொழியிற் சிறப்புக்கள் எனச் சொல்லப்பட்டவற்றுடன் அதன் தூய்மை, தனித்துவம் என்படுகின்றனவற்றையும் பேணி அதனால் முழுச் சமூகத்திலும் இல்லாவிட்டாலும் ஒரு சிறு பகுதியினரிடையேனும் இயங்கக் கூடுமாயிருக்கலாம். எனினும் ஒரு சமூகத்தின் மொழியாகப் பல்வேறு சவால்கட்கு முகங் கொடுக்கும் போக்கில் அது பல மாற்றங்களை உள்வாங்கியுள்ளமையை நாம் மறக்கலாகாது.
தூய்மைவாதிகள் அம் மாற்றங்களின் துணை இல்லாமலே தமிழால் சிறப்பாகச் செயற்பட இயலும் எனவும் அந்நிய மோகத்தாலயே அந்த மாற்றங்கள் தமிழில் நிலை பெற்றன எனவும் வாதிப்பர். இது அறிவுசார்ந்த வாதமும் அல்ல, நேர்மையான வாதமும் அல்ல. உண்மை ஏதெனின், தமிழ்ச் சமூகம் எப்போதுமே வெளியிலிருந்து பல விடயங்களை உள்வாங்கியே வந்துள்ளது. எனினும் தமிழின் அடிப்படையான சில பண்புகளைக் குறிப்பாகத் தமிழுக்கு வலுவூட்டுகிறவற்றை விட்டுக் கொடாமலே அந்த உள்வாங்கல்கள் நடந்துள்ளன. எனவே தான், பல விடயங்கள் வெளியிலிருந்து வந்தவை என்று தோன்றாத விதமாக அவை பல நூறு அல்லது சில ஆயரம் ஆண்டுகளாகவே தமிழில் இருந்து வந்தவை எனவும் அவை தமிழரால் தமிழுக்காக உருவாக்கப்பட்டவை எனவுஞ் சிலரால் வாதிக்க இயலுமாகியுள்ளது.
நமக்கு இந்த விதமான வீம்பு தேவையா என்பது என் மனதை நீண்டகாலமாகவே குடைந்து வந்துள்ள கேள்வி. தமிழின் தொன்மையும் தூய்மையும் பற்றிக் கூறப்பட்ட பல கதைகளை என் இளமையில் நம்பிப் பெருமைப்பட்டிருக்கிறேன். அக் கதைகள் பொய்யென அறியக் கிடைத்த பின்பு, எத்தகைய புனைவுகளின் அடிப்படையில் தமிழ்ப்பற்று என்பது ஒரு மூடநம்பிக்கையாகவும், மாயையாகவும் நம்மீது திணிக்கப்பட்டு வந்துள்ளது என விளங்கியது.
மொழிப்பற்றுக்கு நியாயம் உண்டு. மொழியை நேசிக்கவும் வளர்த்தெடுக்கவும் எடுக்கப்படுகிற முயற்சிகட்கு நியாயமுண்டு. ஒரு மொழியின் ‘தூய்மை’ ‘செம்மை’ என்பன பற்றிய சில வற்புறுத்தல்கட்கும் நியாயம் உண்டு. ஒரு மொழியின் தொன்மையை மதிப்பதற்கும் நியாயமுண்டு. ஆனால் இவற்றுள் எதுவுமே சமூகச் சார்பற்ற குருட்டுத்தனமான மொழிப் பக்தியாகவோ விஞ்ஞான முறையிலான மதிப்பீடுகளை மறுக்கும் மூடநம்பிக்கைகளாகவோ அமைவது நல்லதல்ல. இந்த விதமான வெறித்தனமான மொழிப்பற்றை ஊக்குவிப்போர் பலருக்குத் தமிழின் உண்மையான பெறுமதி தெரியுமோ என்று ஐயப்படுகிறேன்.
தமிழின் தனிச் சிறப்புக்கள் என்பதை விட வெறுமனே சிறப்புக்கள் என்று சொல்வது போதுமானதும் பொருத்தமானதுமாகும். தமிழ் மற்ற எந்த மொழியையும் வட எவ்வகையில் உயர்ந்தது என்பதை விட அது தமிழரின் உயர்வுக்கு எவ்வளவு உதவுகிறது என்பது முக்கியமானது. தமிழின் சிறப்புக்களை அறியாத போது நாம் அதன் ஆற்றலை உணரத் தவறுகிறோம். இன்னொரு மொழியின் நிழலாகவே தமிழை உருமாற்றுகிற ஒரு போக்கிற்கு அந்நிய மோகத்தைவிடத் தமிழ் பற்றிய அறியாமையும் முக்கியமான பங்களிக்கின்றது.
தமிழ்மொழியில் இருந்த பல கூறுகள் காலத்துடன் மாறியுள்ளன. சில கைவிடப்பட்டுள்ளன. புதியன சில வந்து மொழியின் இன்றியமையாத பகுதிகளாகி விட்டன. நாங்கள் இப்போது தமிழ் எழுத்துக்கள் என அறிவன கிரந்த எழுத்துக்கள் என வடமொழிச் சொற்களைச் செம்மையாக எழுதுவதற்காக வகுக்கப்பட்ட எழுத்து முறையின் அடிப்படையிலானவை. ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகள் இது தொடர்பான தெளிவான விளக்கங்களைத் தருகின்றன. கிரந்த எழுத்து முறைக்கு முன்னோடியான எழுத்து முறை மேற்காசியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த அசோகன் காலக் கல்வெட்டுகளில் அறியப்பட்ட பிரமி எழுத்துக்களின் அடிப்படையிலானது. வட பிராமியினின்றும் வேறுபட்ட வடிவைத் தென் பிராமி எழுத்துக்கள் எடுத்தன. எனினும் தமிழுக்கும் மலையாளத்துக்கும் சிங்களத்துக்குமிடையே மிகுந்த எழுத்துவடிவ ஒற்றுமை உண்டு. வடபிராமியின் விருத்தியான தேவநாகரி (சமஸ்கிருதத்துக்கான) எழுத்துக்களின் பாதிப்பு கிரந்த எழுத்தக்களில் உண்டு. அதனால் தேவநாகரியிலிருந்து தான் கிரந்த எழுத்துக்கள் வந்தன என்றாகாது. எனினும் பல பிராகிருதங்கட்கு (அதாவது சமஸ்கிருதமல்லாத பழைய இந்திய மொழிக்கு) தேவநாகரியில் உள்ள பல எழுத்துக்கள் தேவையற்றனவாயிருந்தன. நவீன மொழிகளின் நிலையும் அதுவே.
தமிழ் ஆறே வல்லின எழுத்துக்களை மட்டுமே கொண்டிருந்ததால் அதன் சிறப்பெழுத்துக்களுடன் எல்லாமாகப் பதினெட்டு மெய்கள் அமைந்தன. பிற இந்திய மொழிகளும் சிங்களமும் ஏறத்தாழ முப்பத்தைந்து மெய்யெழுத்துக்களையும் அவற்றுக்கும் மேலாகக் கூட்டெழுத்துக்களையும் (க்க, க்ப, க்வ, க்டி போன்றவற்றுக்கான தனித்தனி எழுத்துக்களையும்) கொண்டுள்ளன. இது மிகையான எண்ணிக்கையிலான எழுத்துக்களையம் அவற்றை வேறுபடுத்துவதிற் சிரமங்களையும் அச்சு, தட்டச்சு போன்ற நவீன கருவிகளின் அமைப்பிற் சிக்கல்களையும் உண்டாக்கின. தமிழுக்கு இச் சிரமங்கள் இல்லாவிடினும் எழுத்துக்களின் ஒருசீரற்ற தன்மை (பழைய னா, னை போன்றவையும் உகர, ஊகர வரிசை எழுத்துக்களிற் பயன்டும் வேறுபட்ட உ, ஊ அடையாளங்களையும் போன்று) சில சிக்கல்களை உருவாக்கின. இவை தொடர்பாக ஈ. வெ. ராமசாமி அவர்கள் (பெரியார்) சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் முன்வைத்த ஆலோசனைகளில் ஒரு பகுதி இன்று நடைமுறைக்கு வந்தாலும் உகர ஊகார வரிசைகள் ஒரு பிரச்சனையாகவே உள்ளன. இவை கணனியில் எழுத்துக்களைப் பதிவதிற் பிரச்சனைகளை ஏற்படுத்தியபோது அவற்றுக்கான தீர்வுகளிடையே உடன்பாடின்மை போக மொழியின் செயற்பாடு பற்றிய தெளிவின்றியே பலவும் முன்வைக்கப்பட்டன. எனினும் இவை நவீன உலகின் தேவைகட்கும் தமிழர் பேசுகிற மொழியைக் குழப்பமின்றித் தமிழில் எழுதுவதற்கும் தமிழ் எழுத்துமுறை போதுமானதா என்ற கேள்விக்கு விடை அளிக்கவில்லை.
தமிழின் சந்தி – புணர்ச்சி விதிகள் தமிழ் மொழியின் இன்றியமையாத சக்தியாக இருந்து வந்துள்ளன. எனினும் தெளிவு கருதிச் சிறிது நெகிழ்வான முறையில் சந்தி பிரித்து எழுதுவது ஆறுமுகநாவலர் போன்றோராலும் ஏற்கப்பட்டது. இன்று “உருவாயாருவாயுளதாயிலதாய்” என்று வெகு சிலரே எழுதுவார்கள். “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” என்றுதான் பலரும் பிரித்து எழுதுவார்கள். “என்றாயுமெனக்கருட்டந்தையுநீ” என்பதை விட “என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ” என்று விரும்பப்படுகிறது. எனினும் எல்லாச் சந்தி விதிகளையும் புறக்கணிப்பது கருத்துக்குழப்பத்துக்கு இடமளிக்கும். “பிஞ்சுக் கரங்கள்” என்பதைப் “பிஞ்சு கரங்கள்” என எழுதினால் அதன் பொருளே வேறு எனவே, இவ் விடத்தில், தெளிவான எடுத்துரைப்புக்கு உதவுகின்ற முறையில் நவீன இலக்கண விதிகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இது மொழிக்கல்விக்கு முக்கியமானது.
தமிழின் சொல்லாக்க விதிகள் எளிமையானவை. ஆனால் ஒரு வகையான மொழிச் சோம்பல் நம்மைப் பீடித்துள்ளது. பொருத்தமான எளிமையான சொல்லைக் கூட அடையாளங் காண இயலாமல் அது நம்மை மறிக்கிறது. ஒலி – ஒளி ஊடகத்துறைகளில் உள்ளவர்களிடம் இந்தச் சோம்பல் ஒரு வியாதியாகிவிட்டது. இதற்குக் காரணம் மொழியறிவு போதாமையே. அச்சிலும் இது தொற்றிக் கொண்டுள்ளது.
“அமைச்சர் வலியுறுத்தல்” என்பதை “அமைச்சர் வலியுறுத்து” என்று எழுதுவதும் சொல்வதும் வலியுறுத்து என்ற வேரிலிருந்து வலியுறுத்தல் என்ற பேர்ச் சொல்லைப் பெறத் தெரியாமையின் விளைவு. “பின் வருவனவற்றை விளக்க” என்பதை வினாத்தாள்களிற் பல முறை கண்டிருக்கிறன். “விளக்குக” என்பது தான் உரிய வினைச் சொல் என்பது தெரியாததன் விளைவு இது. இவை அறியாமையுடன் தொடர்புடையன வாயிருக்கலாம். இன்னொரு வகையான பிரச்சனை தேவையின்றி நீளமான சொற்றொடர்களை உருவாக்குவது தாடர்பானது.
யாரும் “துப்பாக்கிச் சூட்டில் இறப்பதில்லை, “துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்” இறக்கிறார்கள் யாரும் யாரையும் வரவேற்பதில்லை, வரவேற்பு அளிக்கின்றனர். “விற்க முயன்றவர்” கைதாவதில்லை, “விற்பனை செய்ய முயற்சித்தவர்” கைதுசெய்யப்படுகிறார். நாளை சூரியன் உதிக்காது, நாளைய தினம் தான் அது உதிக்கும். இவ்வாறு சம்பவம் அளித்தல், செய்தல் தினம் போன்ற சொற்களைத் திணிப்பது சிலருக்கு வசதியாக அதுவே ஏற்ப்பட்ட ஒலி – ஒளிபரப்பு நடைமுறையாகி விடுகிறது. சிறிதளவு முயற்சி தமிழுக்கு இயலுமான சொல், எழுத்துச் சிக்கனங்களாற் பயன்பெற உதவும்.
இன்னொரு புறம் எவ்வாறு சொற்கள் உருவாகின்றன என்று அறியாமற் புனையப்படுகிற, மரணித்து போன்ற சொற்கள் வழக்கிற்கு வருகின்றன. மரி (இற, சா) என்ற வினைச்சொல்லிருந்து மரணம் என்ற பேர் வருகிறது. மரியிலிருந்து மரித்து, மரித்தார் என்பன வருகின்றன. மரணித்தார் என்பதோ மரணித்து விட்டார் என்பதோ தமிழுக்கு வளஞ் சேர்ப்பதல்ல அவை தமிழை மேலும் சிக்கலாக்குகிறவை. இதிற் கவிஞர்கள் எனப்படுவோர் பலர் பாரிய குற்றவாளிகளாவர் கவித்துவம் என்ற போர்வையின் கீழ்ப் பல குற்றச் செயல்கள் மூடப்பட்டுவிடுகின்றன.
தமிழில் திணை, எண், பால் வேறுபாடுகள் பேர்ச் சொற்களிலும் உள்ளன. வினைச் சொல்லை வைத்தே பேசப்படுவது மனிதரையோ தேவதையையோ நரகரையோ பற்றியதா விலங்குகளையோ சடப்பொருட்களையோ பற்றியதா எனவும் ஒன்றைப் பற்றியதா பலதைப் பற்றியதா எனவும் ஒன்றாயின் ஆணைக் குறிக்கின்றதா பெண்ணைக் குறிக்கின்றதா அல்லாத ஒன்றைக் குறிக்கின்றதா எனவும் அறியலாம் இது பயனுள்ளது. ஆயினும் ஒரு மொழிக்கு அத்தியாவசியமானதல்ல. நவீனத்துவம் வினைச்சொற்கள் வெவ்வேறு விதமாக விகாரப்படுவதை வேண்டுவதில்லை. பொதுபாவனைக்கான படிவங்களை வடிவமைக்கும்போது இத்தகைய வேறுபாடுகளை உள்ளடக்குவது எளிதல்ல எனவே படிவங்கட்கான ஒரு மொழி நடையையோ வழக்கையோ உருவாக்க வேண்டி வரலாம். இங்கெல்லாம் நமக்கு மொழி பற்றிய நீண்டகால நோக்குத் தேவைப்படுகிறது.
தமிழின் பேர்ச் சொற்கள் ஆண்பாலாவதோ பெண்பாலாவதோ எச்சொல்லும் ஆணையா பெண்ணையா குறிக்கின்றது என்பதில் மட்டுமே தங்கியுள்ளது ஆங்கிலந் தவிர்ந்த அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் பால் என்பது இலக்கணத்தால் நிருணயிக்கப்படுகிறது. இந்தோ ஆரிய மொழிகளிலும் அவ்வாறே. ஏன் ஒரு சடப்பொருள் ஆணாகவும் இன்னொன்று பெண்ணாகவும் வேறொன்று அஃறிணையாகவும் அமைய வேண்டுமென்பதற்கு விளக்கங்களை யாரும் தேடுவதில்லை. சொற்களை அவற்றுக்குரிய பாலுடனுந் திணையுடனும் கற்கின்றனர். திராவிட மொழிகளிலும் சிங்களத்திலும் இச் சிக்கல் இல்லை.
இன்றைய தமிழ் எழுத்து முறையில் க்ஷ் வுக்குரியதையும் ஸ்ரீ யையும் விட எல்லாக் கூடடெழுத்துக்களும் கைவிடப்பட்டுவிட்டன. இது நல்ல விடயம். தமிழ் எண்கள் எனப்படுவனவுங் கைவிடப்பட்டுவிட்டன. இதுவும் நல்ல விடயமே வருடம், மாதம், தேதி முதலாகப் பலவேறு சொற்களுக்கு வகுக்கப்பட்ட சுருக்கமான வடிவங்களில் ஓம் என்பதன் குறுக்கமான பிள்ளையார் சுழியை விட எல்லாமே வழக்கொழிந்து விட்டன. இதுவும் நல்ல விடயமே. அதே வேளை, தரிப்புக்குறிகள் தமிழின் ஒரு பகுதி ஆகிவிட்டன. இது தமிழுக்குப் புதிய சாத்தியப்பாடுகளை இயலுமாக்கியுள்ளது. எனினும் இக் குறிகளின் பாவனைக்கான விதிகள் பற்றிய தெளிவு போதாமல் உள்ளது. வினாக்குறிகளை வாக்கியங்களின் நடுவே திணிப்பதும் பொருத்தாத விதமாக வந்த தேவையின்றியுந் தரிப்புக்குறிகளை இடுவது தமிழுக்கு நன்மையானவையல்ல.
தமிழில் ‘அன்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய தனிச் சொல் இல்லை அக் குறையை நிறைவு செய்ய ‘மற்றும்’ என்ற சொல் இன்று பயன்படுகிறது. மற்றும் என்ற சொல்லின் முறையான பொருளைத் தமிழ் இழக்கவே இது வழி செய்யும். வேறு பொருத்தமான சொல்லை உருவாக்க நம்மிடையே தயக்கமுள்ளது. அது போக ‘அன்ட்’ பயன்படும் விதமாகவே தமிழில் ‘மற்றும்’ என்ற சொல் பயன்படுவது, தமிழின் சிறப்பாக ஒரு பண்புக்கு ஊறானது. நானும் நீரும் அவரும் என்று சொல்வது தமிழ் வழக்கு. “நான், நீ, மற்றும் அவர்” என்று ஒருவர் சொல்லக்கூடிய அளவுக்கு ‘மற்றும’; என்ற சொல் தமிழை ஆக்கிரமித்துள்ளது. காற் புள்ளி (,) எனும் குறுந்தரிப்பு அடையாளம் மட்டும் பல இடங்களிற் போதுமானது. “அருணன், அந்தோணி, அமீன் என்போர் வந்தனர்” என்பது “அருணனும் அந்தோனியும் அமீரும் வந்தனர்” என்பதற்கு உடன்பாடனது. “அருணன், அந்தோணி மற்றும் அமீன்” எனும்போது, அமீனைத் தாழ்ந்த நிலையில் வைக்கிறோம். படிவங்களில் ஒன்றையும் பலதையும் வேறுபடுத்த என்போர் என்பன, என்பார், என்பது எனுஞ் சொற்கள் உதவும். மாற்று வழி இல்லாத இடத்து மட்டும் ‘மற்றும்’ பயன்படுவது பொருந்தும்.
சொல்லாக்கம் பற்றி நம்மிடையே மிகுந்த குழப்பம் உள்ளது. எல்லாக் கலைச் சொற்களும் அவை குறிக்கும் பொருளை அடையாளங்காட்டக் கூடியனவாயிருப்பது அவசியம் எனச் சிலர் நினைக்கின்றனர். அது சில வேளைகளில் பயனள்ளதாக இருக்கலாம். ஆனால் வாழும் எந்த மொழிக்கும் அது அவசியமில்லை. ஏனெனில் கலைச் சொற்கள் புனையப்பட்ட போது கொண்டிருந்த பொருளுக்கும் மேலதிகமாக வேறும் பொருட்களைக் காலப்போக்கிற பெறுவதுமின்றிச் சொல் உணர்த்துகிற விடயத்துக்கும் அது குறிக்கிற பொருளுக்கும் கூறவே இல்லாதவாறு அறிவியலும் தொழில் நுட்பமும் மொழியை மாற்றத்துக்குட்படுத்துகின்றன. எனினும் தமிழை வளர்ப்பதாக நினைத்துக் கொண்டு ஆங்கிலச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்களைப் புனைகிற சிலர் செய்வததெல்லாம் ஆங்கிலச் சொல்லுக்கு நெருக்கமான ஒரு தமிழ்ச் சொல்லை உருவாக்குவது மட்டுமே. தம்மை அறியாமலே அவர்கள் தமிழை ஆங்கிலமாக்குகின்றனர்.
இன்று பல்வேறு விதங்களிலும் நவீனத்துவத்தின் பேரில் நாம் தமிழை அல்லற்படுத்தி வருகிறோம் என்பது என் எண்ணம் தமிழில் வலிமையுஞ் சிறப்பும் அதன் இலக்கண விதிகளின் எளிமையே என்பதை நாம் உணரத் தவறியமையே இதன் காரணம்.
தமிழுக்குப் போதாமைகள் உள்ளன. அவற்றைக் கையாளுவது பற்றி நம்மிடைய உடன்பாடு இல்லை. ஏனெனில் நம்மிற் பலர் அப்போதாமைகள் இருப்பதையே ஏற்கவில்லை. அல்லது அரை மனத்துடன் ஏற்கின்றோம். தமிழின் எழுத்துருக்கள், புதிய எழுத்துக்கான தேவை, இலக்கண விதிகளை இந்த நூற்றாண்டிற்கமைய மீள வகுத்தல் என்பன பற்றிய நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தீர்வுகளைத் தேடுகையில் நமது தேவைகளைத் தென்னாசிய, தென்கிழக்காசிய சமூகங்களுடைய தேவைகளுடன் பொருத்திப் பார்ப்பது நன்று. தமிழின் தனித்துவமான இயல்புகளிற் பயன்மிக்கவற்றை விட்டுக் கொடாமலே தமிழை நவீன மொழியாகவும் சகோதர மொழிகளுடன் பொதுமை கொண்டதாயும் விருத்தி செய்வது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
முழு ஐரோப்பாவும் அமெரிக்கக் கண்டங்களும் ஆபிரிக்காவின் இஸ்லாமிய நாடுகள் அல்லாதனவும் அவுஸ்திரேலியாவும் ஆசியாவின் பகுதிகளும் அடிப்படையில் இரண்டு எழுத்து முறைகளையே கொண்டுள்ளன எனலாம். இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு மொழி அறிந்தவர் ஊகித்து வாசிக்க இயலாதவாறு முற்றிலும் வேறுபட்ட ஏழெட்டு எழுத்து முறைகளாவது உள்ளன. (தெலுங்கு – கன்னட எழுத்துக்கள் பல ஒத்த வடிவுடையவை, குஜராத்தி, தெவநாகரி எழுத்துக்களிடையே மேற் கோட்டை விட்டால் அடிப்படை ஒற்றுமை உண்டு என்பதையெல்லாம் கருத்திற் கொண்டே இதைக் கூறுகிறேன்). தென்னாசியாவுக்கான ஒரு சிக்கனமான எளிமையான பொது எழுத்துமுறையை ஏன் நம்மால் உருவாக்க இயலவில்லை?
இந்தியா நீண்டகாலமாக ஒரு நாடாக நிருவகிக்கப்படுகிறது. ஆனால் அதற்கென ஒரு பொது எழுத்துமுறை இல்லை. ஐரோப்பா பிளவுபட்டுக் கிடந்த போதே பல நாடுகட்குப் பொதுவான எழுத்துமுறை உருவாகிவிட்டது. எல்லா எழுத்துக்களும் எல்லா மொழிகளிலும் ஒரே விதமாக உச்சரிக்கப்படாவிட்டாலும், ஏதா ஒரு வகையான பொதுமை உருவாக்கியுள்ளது. நம்மைத் தடுத்து நிற்பது எது? அதை நாம் கடப்பது எப்போது?
சி. சிவசேகரம்
No comments:
Post a Comment