Thursday, December 30, 2010

தமிழ்ப் புத்தாண்டா… சித்திரைத் திருநாளா?

தமிழ்ப் புத்தாண்டா… சித்திரைத் திருநாளா?


னி தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தினம் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், சித்திரை முதல் நாளை சிலர் தமிழ்ப் புத்தாண்டாகக் கருதி வாழ்த்துக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், அறிவிப்பை வெளியிட்டவர் முதல்வர் கருணாநிதி என்பதாலும் இருக்கலாம். குறிப்பாக ஜெயலலிதாவுக்கு இதுதான் முக்கியமான காரணம். ஒருவேளை ஆட்சி மீண்டும் ஜெயலலிதா கைக்கு வந்தால் நிச்சயம் தமிழ்ப் புத்தாண்டு தினமும் சித்திரைக்கு மாறிப்போகும் என்பதில் சந்தேகமில்லை.
உண்மையில் எது தமிழ்ப் புத்தாண்டு… சித்திரை முதல் நாளா? தைத் திருநாளா?
கருணாநிதியை மறந்துவிட்டு, காய்தல் உவத்தலின்றிப் பார்த்தால், தைத் திருநாளைத் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடுவதே நடைமுறையிலும் தமிழரின் இலக்கிய – வரலாற்று ரீதியாகவும் சரியானது.
இயற்கை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்த தமிழர்கள், இயற்கையின் கால நிலையை கணக்கிட்டு, அதில் துவக்க பருவமான இளவேனில் காலத்தில் வரும் தை மாதத்து முதல் நாளை புதிய ஆண்டின் துவக்கமாகக் கொண்டனர். அந்த நாளில் புதுப்பானையில் பொங்கலிட்டு, புத்தாடை கட்டி, வாழ்வின் புத்தம் புதிய துவக்கமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
குமரிக் கண்டமாக தமிழர் நிலப்பரப்பு பரந்து விரிந்திருந்த காலம் தொட்டே இதுதான் உண்மை என்று கூறி, தனித் தமிழர் இயக்கத் தலைவர் மறைமலை அடிகளும் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் புலவர்களும் வரலாற்று ஆசிரியர்களும் ஒன்று கூடி விவாதித்து, கடந்த 1921-ம் ஆண்டில் அறிவித்தனர். இந்த அறிவிப்புக்கு தமிழக அரசின் அங்கீகாரம் 1971-ல்தான் கிடைத்தது.
அப்போதிலிருந்து தமிழர்களின் ஆண்டு என்பது திருவள்ளுவரின் பிறப்பை (இயேசு கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்கிறது தமிழ் வரலாறு) மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டது. அரசுத் துறை சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் திருவள்ளுவராண்டும், தை முதல் நாளை மையப்படுத்திய புத்தாண்டு முறையும் நடைமுறையிலிருந்தது. அரசிதழிலும் இது வெளியாகியுள்ளது.
தை முதல் நாள்தான் புத்தாண்டு என்பது கடந்த 2008-ம் ஆண்டு அரசு ஆணையாகவே அறிவிக்கப்பட்டது.
விவசாய வேலைகள் ஏதுமற்ற, குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத ஒரு மாதத்தில் புத்தாண்டை யாரும் கொண்டாட மாட்டார்கள். பண்டைத் தமிழன் கத்திரி என்று கடும் வெயில் காலத்தை கணக்கிட்டு, அதில் எந்த நல்ல காரியத்தையும் செய்யாமல் தவிர்த்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பிங்கள, விபல, விரோதி என்றெல்லாம் வெவ்வேறு வடமொழிப் பெயர்களில் சுழற்சி முறையி்ல் வரும் புதிய ஆண்டுகள் தமிழர் வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடக் கூட உதவாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே தமிழர்களை இனியும் குழப்பாமல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற முடிவுக்கு ஒருமனதாக வருவதே சிறந்ததாக இருக்கும். இந்த விஷயத்தில் ஊடகமும் உறுதியாக இருக்க வேண்டும். தங்கள் அபிமான தலைவரின் அறிக்கைக்கேற்ப புத்தாண்டு செய்திகளை மாற்றி மாற்றி வெளியிட்டு மக்களைக் கடுப்பேற்றக் கூடாது.
அப்படியெனில் சித்திரைத் திருநாள்…? அதற்கு இப்போது வேறொரு அந்தஸ்து கிடைத்துள்ளது. அது அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளாகவும், தேசிய விடுமுறை தினமாகவும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் உரிமைக் குரலான அவரது பிறந்த தினத்தைப் போற்றும் நாளாக சித்திரை முதல் நாளைக் கடைப்பிடிக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட பலருக்கு நேரமிருப்பதில்லை. ‘நமக்குத் தேவை ஒரு நாள் விடுமுறை… அது தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும் சரி, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளாக இருந்தாலும் சரி என்ற அளவுக்குதான், அவர்களின் எண்ணவோட்டம்!

No comments:

Post a Comment